I am excited to submit the third post on the series: This NRI Life... It is interesting to get different perspective on the same topic. If you wish to write a guest post for NRIGirl blog, please feel free to email me at nrigirl@hotmail.com
About the Author: Bawa Kaseem is my classmate and good friend during my Masters. I used to share my journal entries with him for his valuable comments in our college days. Over years we had lost contact, but Face Book brought us together again. He is a great blogger and writes in Tamil. I admire his writing style; as he brings the scene in front of our eyes ...
For those who can't read Tamil, I owe you a translation. Since I didn't want to hold off on his post till my translation is done, I decided to go ahead with publishing it. Please share the link with your Tamil speaking friends/family. You may visit his blog at: http://www.sillvandu.blogspot.com/
Ladies & Gentlemen! Let's welcome my good friend Bawa Kaseem!
.............................................................................................................................................
'க்' கிழந்த வாழ்க்கை! ("LIFE" without the "L")
"க்" இழந்த வாழ்க்கை! என்னைப் பொறுத்தவரை இந்த NRI வாழ்க்கை.
ஆரம்பத்தில் எல்லாம் அருமையாகத்தான் இருந்தது.
"இன்னைக்கு ஒரு கல்யாணத்துக்கு போயிருந்தோம். நம்ம சொந்தக்காரங்க எல்லாம் உன்னைப்பத்தி விசாரிச்சாங்க! நீ இப்போ அமெரிக்காவுல வேலை பாத்திட்டிருக்கறதா சொன்னப்போ எங்களுக்கு கொஞ்சம் பெருமையாத்தான் இருந்துச்சு!"
-- என்று என் நெருங்கிய சொந்தங்கள் கூறியபோது, அவர்களை பெருமை கொள்ள வைத்ததை எண்ணி எனக்கும் பெருமையாகத்தான் இருந்தது.
திக்கித் திணறி ஆங்கிலத்தில் செமினார் எடுக்க கல்லூரியில் திண்டாடிய பழைய நிலையிலிருந்து, அமெரிக்காவிலேயே வந்து இந்த ஆங்கிலத்தின் மத்தியிலேயே வாழ்க்கையை நகர்த்தும் நிலை வரை வந்து சேர்ந்தது அதிர்ஷ்டம்தான் என்றே தோன்றியது. எப்படியோ, என் மீது அக்கறை கொண்டவர்கள் கவலைப்படும்படியான நிலையினை உண்டாக்காமல் கரை அல்லது இக்கரை சேர்ந்தது ஒரு வித நிம்மதியை மனதுக்குத் தரத்தான் செய்தது.
எல்லாம் அருமையாகத்தான் இருந்தது!
சிலருக்கு சில உதவிகள் செய்ய முடிந்ததில், அதைச் செய்ததால் அவர்கள் மனமாற வாழ்த்தியதில், ஒரு திருப்தியும், அளவிடமுடியாத ஆனந்தமும் மனதை சூழத்தான் செய்தது. 'முடியுமோ?' என யோசித்து பயந்தவை யாவும் முடியும் என்றானபோது ஒரு தைரியமும் பிறக்கத்தான் செய்தது. தடுமாற்றம் இன்றி, தள்ளாட்டம் இன்றி வாழ்க்கையை அதிகக் கவலைகள் இன்றி வாழ்ந்திடலாம் என்று நம்பிக்கையும் உண்டாக,
அருமையாகத்தான் இருந்தது இந்த NRI வாழ்க்கை, அந்த ஆரம்ப நாட்களில்.
~~~ 0 ~~~
"கார் வாங்கப்போறேன் பா!"
"என்ன கார் வாங்கப்போறே?"
"ஹோண்டா!"
"சந்தோஷம்டா!" என்றார் அப்பா.
பொடியானாக இருந்த போது யாரோ ஒரு பெரியவர் என் மனதில் ஒரு கனவுக்கு விதையிட்டிருந்தார்...,
"படிச்சு பெரிய ஆள் ஆகனும்! வாப்பாவ பாத்தியா நல்லா படிச்சதுனாலதானே இன்னைக்கு பெரிய வேலையிலே இருக்காங்க... நீ வாப்பாவ விட பெரிய ஆளா வரணும்!" -- என்று அந்த பெரியவர், அவர் மடியில் என்னை உட்காரவைத்து இப்படி உபதேசித்திருந்தார்.
"வாப்பாவ விட எப்படி பெரிய ஆளா வரமுடியும்?" என்று நான் அவரிடம் கேட்டதும், அதைக்கேட்டு அந்த பெரியவர் சிரித்ததும், அவர் சிரிப்பது ஏன் எனப் புரியாமல் நான் விழித்ததும் இன்றும் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது.
"நீ நல்லா படிச்சு, பெரிய பையன் ஆகி, பெரிய வேலையிலே சேர்ந்து, கை நிறைய சம்பாதிச்சு, கார் வாங்கும்போது வாப்பாவ விட பெரிய ஆள் ஆகிடுவே. வாப்பா கிட்டே மோட்டார் பைக் தானே இருக்கு? கார், மோட்டார் பைக்க விட பெருசுதானே? அப்போ நீ கார் வாங்கும்போது வாப்பாவ விட பெரிய ஆள் ஆயிடுவேயில்லே?" -- கேட்டார்.
"ம்..!" -- என்றேன் புரிந்தும் புரியாத ஒரு குழப்ப நிலையில். அவரே தொடர்ந்து,
"அப்படி நீ கார் வாங்கி பெரிய ஆளாகி காட்டுறதுதான் வாப்பாக்கு பெரிய சந்தோஷத்த கொடுக்கும். வாப்பாவ சந்தோஷப்பட வைப்பியா?" -- கேட்டார்.
"ம்..!" -- என்று அவர் கேள்விக்கு அன்று தலையாட்டியபோதுதான் அந்த கனவுக்கான விதை என் மனதில் விழுந்தது. "கார் வாங்கிட்டேன்பா" என்று அப்பாவிடம் கூறி அவர் சந்தோஷத்தை அவர் முகத்தில் பார்க்கவேண்டும் என்பதுதான் அந்த கனவு. நான் வளர்கையில் என் கனவையும் உரமிட்டு வளர்த்து வந்தேன்.
இன்று, இதோ போனில் கூறுகிறேன் கார் வாங்கப் போகும் விஷயத்தை. ஆனால், அப்பாவின் சந்தோஷத்தை அவர் குரல் வடிவில் மட்டும்தான் கேட்க முடிகிறது. மகிழும் அவர் முகத்தை பார்க்க வேண்டும் எனும் என் கனவு நனவாகவில்லையே.
எத்தனை காலத்து கனவு? எத்தனை காலத்துக் காத்திருப்பு? காலம் கனிந்தும் வருகிறது, காரும் வாங்குகிறேன். ஆனால் நினைத்ததைப் போல நடக்கவில்லையே? நான் அமெரிக்காவில் என்னைப் பெற்றவர்கள் இந்தியாவில். இதை என்னவென்பது? கனவு நனவானதென்றோ, இல்லை நனவாகவில்லையென்றோ சொல்ல முடியாத குழப்ப நிலை. ஆதலால் என் மனதில் மகிழ்ச்சி இல்லை.
"கார் வாங்கிட்டு ஒரு போட்டோ எடுத்து எங்களுக்கு அனுப்பு!" -- என்றார் அப்பா.
ஷோரூமிலிருந்து..., இந்த ஊர் வழக்கப்படி சொல்வதென்றால் டீலரிடமிருந்து, காரை எடுத்து தனியாக வீட்டுக்கு வந்துகொண்டிருந்தேன். அப்போதுதான் மனதில் இன்னொரு ஏக்கம் முளை விட்டது.
அம்மாவுக்கு காரின் முன் சீட்டில் உட்கார்ந்து பயணிப்பதில் ஒருவிதக் கூச்சம் உண்டு. என் மாமா கார் எடுத்து வரும்போதெல்லாம் "முன்னாடி உக்காரு அக்கா!" என அம்மாவை முன் சீட்டில் உட்காரச்சொல்லி வம்புக்கிழுப்பதும், அம்மா மாட்டேன் என்று அடம் பிடிப்பதும் எங்கள் வீட்டில் வாடிக்கையாக நடக்கும் வேடிக்கை.
இப்படி ஓர் கூச்சம் கொண்டிருந்தாலும், "என் பிள்ளை கார் வாங்கும்போது அவன் கூட முன் சீட்டில் உக்கார்ந்து நான் ஜம்முன்னு போவேன்....!" -- என்று அம்மா அடிக்கடி கூறுவதுண்டு. அது மாமாவை கோபம் கொள்ளவைக்க கூறினாலும், அம்மாவின் மனதில் உண்மையில் அப்படி ஒரு ஆசை இருக்கிறது என்பதை மாமா கண்டறிந்து சொல்லும் முன்னரே நானும் உணர்ந்துதான் இருந்தேன்.
இதோ, கார் வாங்கி வருகிறேன். நான் மட்டும் தனியாக ஓட்டிக்கொண்டு வருகிறேன். என்ன பிரயோஜனம்? அப்பாவின் சந்தோஷத்தை பார்த்து அனுபவிக்க முடியவில்லை. அம்மாவை, முன் சீட்டில் உட்காரவைத்து பயணித்து அவள் ஆசையை நிறைவேற்றி திருப்தி காண முடியவில்லை. 'என் அண்ணனின் கார்' என உரிமை கொண்டாடும் தங்கையின் பெருமையை கண்டு இரசிக்க முடியவில்லை. என்னை பாசத்தோடு சுற்றிச் சுற்றி வரும் என் மாமன் பிள்ளைகளை காரில் ஏற்றி ஓர் உலா போக முடியவில்லை. என் ஆனந்தத்தில் பங்கு கொண்டு என்னோடு சேர்ந்து ஆனந்திக்கும் என் சொந்தங்கள் யாருமே என் அருகே இல்லை. ஏதோ காற்கறி கடைக்குச்சென்று கத்திரிக்காய் வாங்கி வருவதைப்போலத்தான் நானும் கார் வாங்கி வந்துகொண்டிருக்கிறேன்.
பல மடங்காகப் பல்கிப்பெருகியது ஏக்கம். மனதில் துளி கூட மகிழ்ச்சி தோன்றவில்லை. மாறாக, சோகமும் ஏமாற்றமும் மாத்திரம்தான் மிஞ்சுகிறது. இக்கரை வந்து சேர்ந்தது பாக்கியமா? அபாக்கியமா? என்று முதல் முதலாகச் சந்தேகம் எழுந்தது அப்போதுதான். இதே நிலை தொடர்ந்தால் அது அபாயம்தான்.
இந்த வாழ்க்கை 'க்' கிழக்கத் துவங்கியதும் அப்போதுதான்.
~~~ 0 ~~~
"தங்கைக்கு நல்ல வரன் வந்திருக்கிறது." அப்பா கூறினார். "எங்க எல்லாருக்கும் பிடிச்சிருக்கு. நீ ஒரு தடவ பையன் கிட்டே பேசு. உனக்கும் பிடிச்சிருக்குன்னா இதையே முடிவு செஞ்சிடலாம்." என வீட்டுக்கு போன் செய்தபோது சந்தோஷமாகக் கூறினார் அப்பா.
நானும் சந்தோஷப்படவேண்டிய விஷயம்தான் ஆனால் எனக்கோ அடக்கமாட்டாமல் அழுகை வந்தது. போன் பேசி வைத்த பிறகு யார் கண்ணிலும் படாமல் என் அறைக்குள் நுழைந்து அழுதுகொண்டிருந்தேன். என் தங்கையை யாரோ என்னிடமிருந்து தட்டிப்பறித்து செல்லப்போகிறார்கள் என்றொரு எண்ணம் மனதில் எழ அதை தாங்க முடியாமல் அழுதுகொண்டிருக்கிறேன்.
"கொஞ்சம் பொறுங்கள்...! ஒரு அண்ணனாக, என் சொந்த சம்பாத்தியத்தில் என் தங்கைக்கு ஒரு மிட்டாய் கூட நான் இன்னும் வாங்கிக் கொடுக்கவில்லை. அவள் ஆசைகளைக் கேட்டும், அதை அவள் சொல்லாமலேயே உணர்ந்தும், அவைகளை பூர்த்தி செய்யவேண்டும் என எனக்கு ஆசை உள்ளது. தயவுசெய்து அதற்காக எனக்கு கொஞ்சம் அவகாசம் தாருங்கள். இன்னும் கொஞ்சம் நாட்களுக்கு அவள் என் தங்கையாக மட்டும், என் உரிமையாக மட்டும் இருக்கட்டும். அவளோடு சண்டைகள் போட்டு இன்னும் போதவில்லை எனக்கு! கொஞ்சம் பொறுங்கள்...!" என மனதுக்குள் குமுறினேன்.
என் தங்கை அவ்வப்போது வெளிப்படுத்திய சின்ன சின்ன ஆசைகளை நான் என் ஞாபகத்தில் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். ஒரு வேலை கிடைத்து, என் சொந்த சம்பாத்தியத்தில், அவைகளை நிறைவேற்றி அவளை ஆச்சரியப்படுத்த வேண்டும் என நினைத்திருந்தேன். இது என் கடமை என்றே நான் கருதிவந்தேன். ஆனால், சம்பாதிக்கத் துவங்கியபோதோ வேறு நாட்டில் இருக்கிறேன். இனி அவள் திருமணத்திற்குதான் ஊருக்கும் போவேன் என்றிருக்க, என் ஆசைகளை நிறைவேற்ற வழி காண இயலாமல் தவிக்கிறேன். இது எனக்குத் தாங்க இயலாத துயரத்தைத் தருகிறது.
முதல் முதலாக என்னை இங்கே உன் மாமன் தான் அழைத்துவந்தான். இதை எனக்கு என் அண்ணன் தான் வாங்கித்தந்தான் என அவள் தன் பிள்ளைகளிடம், அவள் மகிழ்ச்சி கண்ட நிகழ்ச்சிகளைப் பற்றி கூறுகையில், அதில் பெரும்பான்மையும் நான் அவளூக்கு நிறைவேற்றிக் கொடுத்த மகிழ்ச்சிகளாக இருக்கவேண்டும் என்று ஒரு ஆசை எனக்கு உண்டு. ஆனால் இனி அந்த ஆசைகள் நிறைவேற வழியும் இல்லை.
என் முகத்தில் நான் மறைக்க முயன்ற சோகத்தினை படித்த என் அருமைத் தோழர்கள் எனக்கு ஆறுதல் சொன்னார்கள்.
"தங்கைக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுப்பதுதான் ஒரு அண்ணாக நீ செய்ய வேண்டிய அதிமுக்கியமான கடமை? கல்யாணம் ஆயிட்டா அவள் உன் தங்கை இல்லைன்னு ஆயிடுமா? பெண்ணின் அண்ணன் அமெரிக்காவில் இருக்கிறான் என்பதே ஒரு பெருமையான விஷயம் தான். அப்படி ஒரு பெருமையை உன் தங்கைக்கு நீ கொடுத்திருக்கே... அதை நினைச்சு சந்தோஷப்படு." என்றெல்லாம் எனக்கு அவர்கள் ஆறுதல் சொன்னார்கள்.
சில விஷயங்களை நேடிட, சில விஷயங்களை இழக்கத்தான் வேண்டியிருக்கும் என நானும் சமாதானம் ஆனேன். ஆரம்பகால அருமைகளில் "அருமை" குறைந்து வருவதை தெளிவாக உணரத்துவங்கினேன். இந்த NRI வாழ்க்கை, சில நேட்டங்களை தரத்தான் செய்கிறது. ஆனால் அதற்கு விலையாக எனது சில கனவுகளையும், ஆசைகளையும் காவு வாங்கிக்கொள்ளத்தான் செய்கிறது.
அதலினால்தான் இது "க்" இழந்த வாழ்க்கை என்றானது!
~~~ 0 ~~~
ஆரம்ப கால NRI ஜீவிதத்தில் உணர்ந்திட்ட அருமைகள் நாளடைவில் குறைந்து வருவது உண்மையான உண்மை.
இந்த உண்மைகள் ஒவ்வொரு முறை ஊருக்குச் செல்லும்போதும் அப்பட்டமாகத் தெரியவருகிறது. சொல்லப்போனால் ஊருக்குப் போவதை எண்ணும்போதே ஒருவித பயம் தோன்றுவதை தடுக்க முடிவதில்லை. இந்த பயங்களை தோற்றுவிப்பது, உறவினர்களின் உருவங்களில் தென்படும் மாற்றங்கள்!
கடந்த பயணத்தில் கண்டு மனதில் பதித்துச் சென்றிருக்கும் உருவத்திற்கும், இம்முறை சென்று காணும் உருவத்திற்கும் உள்ள வித்தியாசங்கள் கன்னத்தில் ஓங்கி அறையத்தான் செய்கிறது.
கடந்த முறை குழந்தைப் பருவத்தில் இருந்தவர்கள் இப்போது இளமை எய்தியிருக்க, நானோ, இவர்கள் இன்னும் குழந்தைகள் எனும் மனோபாவத்தோடு குழையத்துவங்க, அவர்களோ இளமைக்குறிய பக்குவத்தில் இடைவெளி காக்க, அங்கே உண்டாகும் உணர்வுகளின் இடைவெளிகளை சமாளிப்பது எப்போதும் பெரும் போராட்டமே.
கடந்த முறை இளமை பருவத்தில் இருந்தவர்கள் இப்போது முதுமைக்கான அறிகுறிகளை காட்டத்துவங்கியிருக்க, அதை ஜீரணிக்க இயலாமல் மனம் பாடுபடுவது அடுத்த கொடுமை.
முதுமைப் பருவத்தில் கடந்த முறை விட்டுச்சென்றவர்களின் பாடு அடுத்ததாக பயம் தர காத்திருக்கும். போன முறை நடந்துகொண்டிருந்தவர் இப்போது உட்கார்ந்துவிட, கடந்த முறை உட்கார்ந்திருந்தவர் இப்போது படுத்துவிட, கடந்த முறை படுக்கையாய் கிடந்தவர்களில் சிலர் இப்போது இயற்கை எய்தியிருக்க, கொடுமை.. கொடுமை.. இது மிகக் கொடூரமான கொடுமை.
இந்த வேதனைகள் அங்கிருப்பவர்களுக்கும் உண்டு.
என்னில் நரை கண்டு அம்மா கண்கலங்குவாள். 'சின்னப் பையன்' முகம் மாறி முதிர்ச்சி வந்திட்டது என அத்தை கலங்குவாள். 'பேச்சில் இல்லை பழைய கலகலப்பு' என நண்பர்கள் வருந்துவர். இந்த உருவ மாற்றங்கள் தரும் பயங்கள் பயங்கரமானவையே!
ஆரோக்கியத்தோடு அவர்கள் இருக்க, அவர்களோடு நாமும் ஆரோக்கியமாக இருந்து கழிந்திருக்க வேண்டிய நல்ல பொழுதுகளை, தனிமையில், தூரத்தில், கழித்துவிட்டு, கடைசியில் கணக்கு பார்க்கையில் மிஞ்சப்போவது லாபமா இல்லை நஷ்டமா? எனும் கேள்விக்கு உறுதியான பதில் ஏதும் தெரிவதில்லை.
ஆதலினால்தான் சொல்கிறேன் இது 'க்' கிழந்த வாழ்க்கையென்று.
~~~ 0 ~~~
உணர்வுகள் சுருங்குகிறதோ என்றொரு அச்சம் எனக்கு!
கல்யாணம், காதுகுத்து, பண்டிகை என வந்தால் அதிக பட்சமாக ஒரு மணிநேரம் தொலைபேசுதலில் முடிவுறுகிறது மகிழ்ச்சியில் பங்குகொள்ளல். கடும் நோய் கண்டார், மரணம் கொண்டார் என்பதுபோன்ற செய்திகளுக்கும் அரைமணி, ஒரு மணிநேர தொலைபேசலில் முடிவுறுகிறது துக்கம். உணர்வுகள் சுருங்கிப்போயின் வாழ்வதில் என்ன பயன்?
மொத்தத்தில் இது ஒரு தொங்குநிலை. நண்மையென்றோ அல்லவென்றோ, இன்பமென்றோ துன்பமென்றோ, சரியென்றோ தவறென்றோ ஏது முடிவுக்கும் வரமுடியாத திரிசங்கு நிலை.
சிலர் வாதிப்பதுண்டு. இங்கே வாழும் வாழ்க்கை 'இக்' கைத்தான் இழந்திருக்கிறது. இங்கு வராதிருந்திருந்தால் வாழ்க்கை 'திக்' கையே இழந்திருக்கும் என்று. "இல்லை!" நான் இந்த வாதத்தை மறுக்கிறேன். நம் நாட்டில் இருப்பவர்கள் எல்லாம் திக்கிழந்தா தவிக்கிறார்கள்? ஆனால், இங்கோ பெரும்பான்மையானவர்கள் இக்கிழந்துதான் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். குறைந்தபட்சம் நான் அறிந்தவரை.
ஒன்றுக்கு இரண்டு கார் வாங்கியும், வீடு வாங்கியும், ஓர் உயர் நிலை வாழ்க்கையினை கடைபிடித்தும் இங்கு சாதிப்பது சுலபம். இவை யாவற்றையும் நம் நாட்டில், அனைவரும் சுட்டிக்காட்டும், குற்றம்சாட்டும், குறைபாடுகளுக்கு இடையிலும் சாதிப்பவர்தான் உண்மையான சாதனையாளர், என்னைப் பொருத்தவரை, அவரே, திறம் வாய்ந்த திறமைசாலி.
எப்படி இருக்கிறது இந்த NRI வாழ்க்கை என யோசிக்கும் போதெல்லாம், கல்லூரி நாட்களில் சொல்லிவந்த ஒரு ஹாஸ்யம் தான் என் நினைவுக்கு வருகிறது.
"உனக்கென்னடா உங்க அப்பா ·பாதரு, அம்மா மதரு, அண்ணன் பிரதரு, அக்கா சிஸ்டரு மொத்தத்துல உங்க குடும்பமே ஒரு பேமிலி...." -- என்று ஒரு ஹாஸ்யம் சொல்வதுண்டு.
சொல்கின்ற தொணி என்னமோ "உங்க அப்பா Singer ரு, அம்மா dancer ரு, அண்ணன் கம்போஸரு, அக்கா ஆர்ட்டிஸ்ட்டு, உங்க குடும்பமே ஒரு கலைக்குடும்பம்" என்பதுபோல் ஏதோ புகழ்த்தி சொல்வதைப்போல் இருக்கும். ஆனால், அர்த்தம் பார்க்கையில் இப்படி ஏதும் சொல்லவும் இல்லை, சொன்னதிலும் உண்மைக்கு மாறாக ஏதும் இல்லை, என்பதுபோல அமைந்த ஒரு ஹாஸ்ய சொல்லாடல் இது.
இதுபோலத்தான் இருக்கிறது என் NRI வாழ்க்கையும். எல்லாம் இருப்பதாக ஒரு தொணி தெரியும். கூர்ந்து பார்க்கையில் எல்லாம் இழப்பதாக ஓர் நிலை புரியும்.
ஆதலினால்தான் இதை 'க்' இழந்த வாழ்க்கை என்கிறேன்.
எல்லாம் சரி, அது என்ன 'க்' இழந்த வாழ்க்கை?
"க்" கை விடுவித்து சொல்லிப்பாருங்கள் வாழ்க்கையை. "வாழ்கை" என இது பிடிப்பில்லாது இருக்கும். இப்படி பிடிப்பில்லாமல்தான் இருக்கிறது எனது இந்த 'க்' கிழந்த என் "NRI வாழ்கை"!
பாவா
ஜுன் 18, 2010
Every dog has his day
8 months ago
21 comments:
Great post Bawa! Appreciate your time and efforts in writing this for NRIGirl blog. Thank you and wishing you a Blessed NRI Life!!
படிக்க நன்றாக இருந்தது. எத்தனை கார் வாங்கினாலும் குடும்ப பாசத்திற்கு முன்னால் அவை ஒன்றுமே இல்லை.
True but hard to digest...Thanks Hepzi...for introducing me to Bawa's writings...Bawa, can you also write about people ignore their mother tongue (TAMIL) after coming here....
SG & Bawa! Please teach me how to write in Tamil - I mean electronically....
~ NRIGirl
Queen:- Thank you very much for publishing this article in your blog. Master card is planning to include a new line in their ad. It’s going to say… “Queen posting her friends’ articles in her blog is Priceless… for everything else there is Master card”! Also, thanks a lot for your wonderful introduction about me. I still remember our college days… our discussions (rather fights?) about our writings.. our views etc.., Thank you “Queenakka!”
Shan :- Thanks for your comment. I guess people in Tamil Nadu itself have started ignoring Tamil, idhula, how can we comment anything about the people who ignore Tamil after coming here? but then, will try to write about it sometimes.
SG :- மிக்க நன்றி SG. சொந்தக்'கார்', பந்தக்'கார்' யாரும் அருகில் இல்லாமல் எத்தனை சொந்த 'கார்' வாங்கினாலும், முழுதான மகிழ்ச்சியை காண இயலாதுதான் போனது. நல்லவேளை, ஒரு NRIGirl, ஒரு SG, ஒரு Shan, என சிலர் Comment எழுதியதால் தப்பித்தேன். இல்லாவிட்டால், கார் வாங்கியும் மகிழ்ச்சி கிடைக்காது போனதைப் போல, இந்தக் கட்டுரை எழுதிய மகிழ்ச்சியும் கிட்டாதே போயிருக்கும்.
உங்களோடு சேர்த்து அனைவருக்கும் நன்றி!
Bawa: Your proposed Master Card ad made me laugh out loud!
Thank you Shan & SG for encouraging Bawa.
Bawa: Now don't just disappear. Stay in touch. Come visit us this summer...
Very nice. Bringing the facts infront of the eyes. excellent
Good one. yea we have everything but seem to have nothing. Thats true. Keep in touch.
Hi Bawa,
Like always, I'm truly impressed with your writing abt NRI life....shld i still call it a LIFE!!!!!. Anyways dont wanna add fuel to fire :-)!.
Its long since you have written in your blog too, pls do continue putting down your thoughts into words.
Hi Queen,
Got to read another good work of Bawa bcoz of U, thnx :-)
Machaan....Excellent post. Unnai naan arivaen...But still you keep surprising me with your every post
Babuikka,it was wonderful.Really enjoyed reading it..As usual your writing style captivated me....keep writing..u r too talented.
Sharmi
பாவா, உங்கள் தமிழ் வழக்கம் போல் அருமை. உங்கள் கருத்து தொகுப்பும் கோர்வையாக சொல்லும் நேர்த்தியும் அழகாக இருக்கிறது. ஆனால் எத்தனை 'NRI ' கள் 'RI ' களாக விரும்புகிறார்கள்? குறைந்தபட்சம் அமேரிக்க குடிமகன் ஆன பிறகு தான் இந்த நாட்டை விட்டே போக வேண்டும் என்று பலர் தீர்மானமாக இருக்கிறார்கள். நான் கண்ட வரை, 'க்' இழந்த வாழ்க்கை வாழ்வதில் பலரும் புலம்புகிறார்கள் ஆனால் இந்த வாழ்க்கையை தான் விரும்புகிறார்கள். பலர் இந்த வாழ்க்கையை விட்டு திரும்பி போக முடியாது என்று கூட சொல்லுகிறார்கள். வருடத்திருக்கு 1 முறை செல்லும்போது தான் உறவுகளின் அருமை பலருக்கும் புரிகிறது. இது NRI களுக்கு மட்டும் அல்ல. உறவுகளின் அருகிலேயே, அவர்கள் வசிக்கும் ஊரிலேயே இருப்பவர்களுக்கும் பொருந்தும். அதனால், NRI கள் மட்டுமல்ல 'க்' இழந்த வாழ்க்கை வாழ்பவர்கள், இந்த எந்திர உலகத்தில் வாழ்க்கையின் வேகதிர்க்கேர்ப்ப ஓடும், அல்லது ஓட முயற்சிக்கும் அனைவருமே 'வாழ்கை' தான் வாழ்கிறார்கள் என்பது என் தாழ்மையான கருத்து.
Dear Anonymous/Mary/Smitha/Nee Naan Sivam/Sharmi/Reflections! Greetings to you all! I have notified Bawa of your comments. Expecting him to stop by to respond soon.
Thank you for visiting my blog.
~ NRIGirl
Bawa, very true posting . As usual your other posting it is very nice.
Regards,
Puvi.
பாபு அண்ணா... உங்கள் எழுத்து மற்றும் எண்ண திறமையை எவ்விதத்திலும் சந்தேகிக்க முடியாது. எப்போதும் போல் நீங்கள் அனைத்திலும் வல்லவர் என நிருபித்து உள்ளீர்கள். :) இந்தியாவிலிருந்து வெளிநாடு செல்ல துடிக்கும் ஒவ்வொரு இந்தியனும் தன் கனவுகள் நிஜமாக போவதாக எண்ணி செல்கிறார்கள்... அந்த கனவு நிஜமாக சில நிஜங்கள் கனவாக மாறுவதை யாருமே சிந்திப்பதில்லை.. உங்கள் எழுத்தில் ஒவ்வொரு இந்தியன் வெளிநாட்டில் படும் வேதனைகளை உணர முடிகிறது.
இன்னும் இது போல் எழுத என் வாழ்த்துகள்.
உங்கள் சின்ன பொண்ணு!
Bawa,
Post is good.But i am going to comment in different aspect and not sure how you gonna accept my comments
1. Even in INDIA no parents and children are together after Marriage.Very hard to accept but this is the real fact.
2. When you grow we need to accept these changes and they are part of our life.
3. Once the social network started families are sharing the info using Facebook / orkut :))
4. I would say we always " Grass is green on the other Side "
Even before i stated this to you " We are very much emotional idiots " including myself :)
Yethavathu Thappa Solli Irunda Mannikavum :)
Queen:
Thank you very much for passing on the “Cherry on top” award to me for this article.
வஸிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் பெற்ற விஸ்வாமித்திரர் போல நானும் நன்றியோடு என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கல்லூரி நாட்களிலிருந்தே எனது எழுத்துக்களுக்கு உண்மை யான, நடுநிலையான, விமர்சனம் அளிக்கும் உங்களிடமிருந்து இதைப் பெற்றுக்கொள்வது பெருமையே.
இல்லாவிட்டாலும், மகாராணியார் (Queen!) தந்தருளும் விருதுகள் பெருமையோடு போற்றிக் கொள்ளத் தக்கதுவே! ஆகவே நன்றி தோழியே!
~~~ 0 ~~~
Anonymous, Mary, Smitha, NN Sivam, Sharmi, என் chinnapponnu and Puviarasan:
Thank you so very much for all your comments.
~~~ 0 ~~~
Reflections:
உங்கள் பெயருக்கேற்றபடி, உங்கள் கருத்துக்களை மிக அழகாக பிரதிபலித்துள்ளீர்கள். உங்கள் பாராட்டு களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். நீங்கள் தெரிவித் திருக்கும் கருத்துக்களை நான் முழுதுமாக ஏற்றுக் கொள்கிறேன்.
'க்' கிழந்த வாழ்க்கை எனும் இக்கட்டுரை எழுதிய என் நிலையும் இதே 'புலம்பல் நிலை' தான். "போதுமடா சாமி" என முடிவு செய்து அடுத்த விமானத்தில் ஊரைப்பார்த்துச் சென்றுவிட கொள்ளை ஆசைதான். ஆனால், அந்த ஆசையை நிறைவேற்ற இயலாமல் போகையில்தான் 'புலம்பல்' வருகிறது.
ஆனால் இப்படி புலம்புபவர்கள் இந்த வாழ்க்கையைத் தான் விரும்புகிறேன் என்கிறார்களா என்பதில் எனக்குச் சந்தேகம் உண்டு. உறுதியாக இந்த வாழ்க்கையை விரும்பும் பட்சத்தில் இவர்கள் புலம்ப வேண்டிய அவசியமும் இல்லை, புலம்புவதில் அர்த்தமும் இல்லை. இருந்தும் புலம்புகிறார்கள் என்றால் இழப்புகளோடு சமரசம் செய்துவிட்ட போதிலும் அதில் சமன்பாடு காண இயலாமல் தவிப்பவர்களாகத்தான் இருக்க முடியும் என்றே எண்ணத்தோன்றுகிறது.
அமெரிக்க குடியுரிமை பெற்ற பிறகு செல்லலாம் எனும் தீர்மானத்தில் இருப்பவர்களும், குடியுரிமை பெற்ற பிறகே ஆயினும் RI ஆக வாழ விருப்பம் கொண்டிருப்பதால் தானே திரும்பிச்செல்லவேண்டும் என நினைக்கிறார்கள்? "குடியுரிமை பெற்ற பிறகு" என்பது, திரும்பச் செல்வதற்காக இவர்கள் நிர்ணயிக்கும் கால அளவு மாத்திரமே. இதுநாள் வரை மூச்சடைக்கியாயிற்று இன்னும் கொஞ்சம் அடக்கி "குடியுரிமை" எனும் முத்தெடுத்திடுவோம், பிற்காலத்தில், நமக்கோ, நம் பிள்ளைகளுக்கோ உபயோகமாக இருக்குமானால் இருந்துவிட்டுப் போகட்டும் என்று எண்ணுபவர்கள்தான் இவர்களில் பலரும்.
//"இந்த எந்திர உலகத்தில் வாழ்க்கையின் வேகதிர்க்கேர்ப்ப ஓடும், அல்லது ஓட முயற்சிக்கும் அனைவருமே 'வாழ்கை' தான் வாழ்கிறார்கள்"//
- எனும் உங்கள் கருத்தை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். அந்த அதிவேகத்திற்கு ஈடு கொடுக்க இங்கு வந்தால்தான் முடியும் என நினைத்துதான் இங்கு வந்து சேர்ந்தோம். இங்கு வந்து சேர்ந்தும் சில காலம் கழிந்துதான் ஏக்கம் பிறக்கிறது, இழப்புகள் என்று சில விஷயங்கள் உணரப்படுகிறது. அதை நினைத்த மாத்திரத்தில் ஈடு செய்ய இயலாமல் போகவேதான் புலம்ப வேண்டியதாகிறது.
இந்த ஓட்டத்தை அங்கேயே மேற்கொண்டிருந்தால், ஏக்கம் வந்த மாத்திரத்தில், இழப்பை உணர்ந்த மாத்திரத்தில் அதை சுலபமாக ஈடுகட்டியிருக்க முடிந்திருக்கும். இங்கே வந்திருப்பதால் சிலரால் அது முடியாது போகவே புலம்பவேண்டியிருக்கிறது.
ஒரு விஷயம் நான் தெளிவுபடுத்தியாகவேண்டும். நான் எல்லோரும் இப்படித்தான் என்று கூறவில்லை. சிலர் இந்த வாழ்க்கையை விரும்பி ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். சிலருக்கு இதுவெல்லாம் இழப்பாகக் கூடத் தோன்றாது. இன்னும் சிலர், இழப்புகளை தாங்கிக்கொள்ளும் பக்குவம் வளர்த்திருக்கிறார்கள், ஆனால், நானறிந்தவரை நானும் உட்படும் பெரும்பாண்மையும், இருக்கவும் முடியாமல், இழக்கவும் முடியாமல் "க்" கிழந்தே வாழ்கிறார்கள்.
~~~ 0 ~~~
Ravi:
First of all, I am so very happy to get a comment from you. This is the first time I guess I am getting a comment from you. So thanks again.
“Thappaga eadukkavendiya avasiyam illai. Karuthukkallai therivippadhu thappalla, karuthukkallai thinippadhu thaan thappu.”
Bawa & Queen, Really superb!!!
I completely agree with you Bawa. However, don't loose your heart :-)
Keep going..
Senthil Kumar. C.R
In tamil they say Ikkarai Mattuku akkarai pachai.. or the pastures are always green on the other side. I myself had been an NRI for several years and now settled down in homeland.. There aint lot of love left in our present society here.. The aged homes and small family setups are indication of the decrease in bondage and love among family members.. It is great that u live there and feel for ur loved ones back in ndia rather than live here and be disappointed by the sonthams here..
தமிழின் பெருமை அதன் வார்த்தைகள் தான்.. மிக சிறப்பாக எழுதிய இந்த பெண்மணிக்கு என் நன்றி. தமிழில் எழுத சிறிது சிரமம் என்பதால் நான் தமிழில் எழுதுவது இல்லை ஆனால் தமிழில் எழுத மிக பிடிக்கும்
:-)
Babu, I m very impressed with your writing..I ve been living this NRI life more than a decade now..fully agree with you..keep writing..very nice..
Post a Comment