I am excited to submit the third post on the series: This NRI Life... It is interesting to get different perspective on the same topic. If you wish to write a guest post for NRIGirl blog, please feel free to email me at nrigirl@hotmail.com
About the Author: Bawa Kaseem is my classmate and good friend during my Masters. I used to share my journal entries with him for his valuable comments in our college days. Over years we had lost contact, but Face Book brought us together again. He is a great blogger and writes in Tamil. I admire his writing style; as he brings the scene in front of our eyes ...
For those who can't read Tamil, I owe you a translation. Since I didn't want to hold off on his post till my translation is done, I decided to go ahead with publishing it. Please share the link with your Tamil speaking friends/family. You may visit his blog at: http://www.sillvandu.blogspot.com/
Ladies & Gentlemen! Let's welcome my good friend Bawa Kaseem!
.............................................................................................................................................
'க்' கிழந்த வாழ்க்கை! ("LIFE" without the "L")
"க்" இழந்த வாழ்க்கை! என்னைப் பொறுத்தவரை இந்த NRI வாழ்க்கை.
ஆரம்பத்தில் எல்லாம் அருமையாகத்தான் இருந்தது.
"இன்னைக்கு ஒரு கல்யாணத்துக்கு போயிருந்தோம். நம்ம சொந்தக்காரங்க எல்லாம் உன்னைப்பத்தி விசாரிச்சாங்க! நீ இப்போ அமெரிக்காவுல வேலை பாத்திட்டிருக்கறதா சொன்னப்போ எங்களுக்கு கொஞ்சம் பெருமையாத்தான் இருந்துச்சு!"
-- என்று என் நெருங்கிய சொந்தங்கள் கூறியபோது, அவர்களை பெருமை கொள்ள வைத்ததை எண்ணி எனக்கும் பெருமையாகத்தான் இருந்தது.
திக்கித் திணறி ஆங்கிலத்தில் செமினார் எடுக்க கல்லூரியில் திண்டாடிய பழைய நிலையிலிருந்து, அமெரிக்காவிலேயே வந்து இந்த ஆங்கிலத்தின் மத்தியிலேயே வாழ்க்கையை நகர்த்தும் நிலை வரை வந்து சேர்ந்தது அதிர்ஷ்டம்தான் என்றே தோன்றியது. எப்படியோ, என் மீது அக்கறை கொண்டவர்கள் கவலைப்படும்படியான நிலையினை உண்டாக்காமல் கரை அல்லது இக்கரை சேர்ந்தது ஒரு வித நிம்மதியை மனதுக்குத் தரத்தான் செய்தது.
எல்லாம் அருமையாகத்தான் இருந்தது!
சிலருக்கு சில உதவிகள் செய்ய முடிந்ததில், அதைச் செய்ததால் அவர்கள் மனமாற வாழ்த்தியதில், ஒரு திருப்தியும், அளவிடமுடியாத ஆனந்தமும் மனதை சூழத்தான் செய்தது. 'முடியுமோ?' என யோசித்து பயந்தவை யாவும் முடியும் என்றானபோது ஒரு தைரியமும் பிறக்கத்தான் செய்தது. தடுமாற்றம் இன்றி, தள்ளாட்டம் இன்றி வாழ்க்கையை அதிகக் கவலைகள் இன்றி வாழ்ந்திடலாம் என்று நம்பிக்கையும் உண்டாக,
அருமையாகத்தான் இருந்தது இந்த NRI வாழ்க்கை, அந்த ஆரம்ப நாட்களில்.
~~~ 0 ~~~
"கார் வாங்கப்போறேன் பா!"
"என்ன கார் வாங்கப்போறே?"
"ஹோண்டா!"
"சந்தோஷம்டா!" என்றார் அப்பா.
பொடியானாக இருந்த போது யாரோ ஒரு பெரியவர் என் மனதில் ஒரு கனவுக்கு விதையிட்டிருந்தார்...,
"படிச்சு பெரிய ஆள் ஆகனும்! வாப்பாவ பாத்தியா நல்லா படிச்சதுனாலதானே இன்னைக்கு பெரிய வேலையிலே இருக்காங்க... நீ வாப்பாவ விட பெரிய ஆளா வரணும்!" -- என்று அந்த பெரியவர், அவர் மடியில் என்னை உட்காரவைத்து இப்படி உபதேசித்திருந்தார்.
"வாப்பாவ விட எப்படி பெரிய ஆளா வரமுடியும்?" என்று நான் அவரிடம் கேட்டதும், அதைக்கேட்டு அந்த பெரியவர் சிரித்ததும், அவர் சிரிப்பது ஏன் எனப் புரியாமல் நான் விழித்ததும் இன்றும் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது.
"நீ நல்லா படிச்சு, பெரிய பையன் ஆகி, பெரிய வேலையிலே சேர்ந்து, கை நிறைய சம்பாதிச்சு, கார் வாங்கும்போது வாப்பாவ விட பெரிய ஆள் ஆகிடுவே. வாப்பா கிட்டே மோட்டார் பைக் தானே இருக்கு? கார், மோட்டார் பைக்க விட பெருசுதானே? அப்போ நீ கார் வாங்கும்போது வாப்பாவ விட பெரிய ஆள் ஆயிடுவேயில்லே?" -- கேட்டார்.
"ம்..!" -- என்றேன் புரிந்தும் புரியாத ஒரு குழப்ப நிலையில். அவரே தொடர்ந்து,
"அப்படி நீ கார் வாங்கி பெரிய ஆளாகி காட்டுறதுதான் வாப்பாக்கு பெரிய சந்தோஷத்த கொடுக்கும். வாப்பாவ சந்தோஷப்பட வைப்பியா?" -- கேட்டார்.
"ம்..!" -- என்று அவர் கேள்விக்கு அன்று தலையாட்டியபோதுதான் அந்த கனவுக்கான விதை என் மனதில் விழுந்தது. "கார் வாங்கிட்டேன்பா" என்று அப்பாவிடம் கூறி அவர் சந்தோஷத்தை அவர் முகத்தில் பார்க்கவேண்டும் என்பதுதான் அந்த கனவு. நான் வளர்கையில் என் கனவையும் உரமிட்டு வளர்த்து வந்தேன்.
இன்று, இதோ போனில் கூறுகிறேன் கார் வாங்கப் போகும் விஷயத்தை. ஆனால், அப்பாவின் சந்தோஷத்தை அவர் குரல் வடிவில் மட்டும்தான் கேட்க முடிகிறது. மகிழும் அவர் முகத்தை பார்க்க வேண்டும் எனும் என் கனவு நனவாகவில்லையே.
எத்தனை காலத்து கனவு? எத்தனை காலத்துக் காத்திருப்பு? காலம் கனிந்தும் வருகிறது, காரும் வாங்குகிறேன். ஆனால் நினைத்ததைப் போல நடக்கவில்லையே? நான் அமெரிக்காவில் என்னைப் பெற்றவர்கள் இந்தியாவில். இதை என்னவென்பது? கனவு நனவானதென்றோ, இல்லை நனவாகவில்லையென்றோ சொல்ல முடியாத குழப்ப நிலை. ஆதலால் என் மனதில் மகிழ்ச்சி இல்லை.
"கார் வாங்கிட்டு ஒரு போட்டோ எடுத்து எங்களுக்கு அனுப்பு!" -- என்றார் அப்பா.
ஷோரூமிலிருந்து..., இந்த ஊர் வழக்கப்படி சொல்வதென்றால் டீலரிடமிருந்து, காரை எடுத்து தனியாக வீட்டுக்கு வந்துகொண்டிருந்தேன். அப்போதுதான் மனதில் இன்னொரு ஏக்கம் முளை விட்டது.
அம்மாவுக்கு காரின் முன் சீட்டில் உட்கார்ந்து பயணிப்பதில் ஒருவிதக் கூச்சம் உண்டு. என் மாமா கார் எடுத்து வரும்போதெல்லாம் "முன்னாடி உக்காரு அக்கா!" என அம்மாவை முன் சீட்டில் உட்காரச்சொல்லி வம்புக்கிழுப்பதும், அம்மா மாட்டேன் என்று அடம் பிடிப்பதும் எங்கள் வீட்டில் வாடிக்கையாக நடக்கும் வேடிக்கை.
இப்படி ஓர் கூச்சம் கொண்டிருந்தாலும், "என் பிள்ளை கார் வாங்கும்போது அவன் கூட முன் சீட்டில் உக்கார்ந்து நான் ஜம்முன்னு போவேன்....!" -- என்று அம்மா அடிக்கடி கூறுவதுண்டு. அது மாமாவை கோபம் கொள்ளவைக்க கூறினாலும், அம்மாவின் மனதில் உண்மையில் அப்படி ஒரு ஆசை இருக்கிறது என்பதை மாமா கண்டறிந்து சொல்லும் முன்னரே நானும் உணர்ந்துதான் இருந்தேன்.
இதோ, கார் வாங்கி வருகிறேன். நான் மட்டும் தனியாக ஓட்டிக்கொண்டு வருகிறேன். என்ன பிரயோஜனம்? அப்பாவின் சந்தோஷத்தை பார்த்து அனுபவிக்க முடியவில்லை. அம்மாவை, முன் சீட்டில் உட்காரவைத்து பயணித்து அவள் ஆசையை நிறைவேற்றி திருப்தி காண முடியவில்லை. 'என் அண்ணனின் கார்' என உரிமை கொண்டாடும் தங்கையின் பெருமையை கண்டு இரசிக்க முடியவில்லை. என்னை பாசத்தோடு சுற்றிச் சுற்றி வரும் என் மாமன் பிள்ளைகளை காரில் ஏற்றி ஓர் உலா போக முடியவில்லை. என் ஆனந்தத்தில் பங்கு கொண்டு என்னோடு சேர்ந்து ஆனந்திக்கும் என் சொந்தங்கள் யாருமே என் அருகே இல்லை. ஏதோ காற்கறி கடைக்குச்சென்று கத்திரிக்காய் வாங்கி வருவதைப்போலத்தான் நானும் கார் வாங்கி வந்துகொண்டிருக்கிறேன்.
பல மடங்காகப் பல்கிப்பெருகியது ஏக்கம். மனதில் துளி கூட மகிழ்ச்சி தோன்றவில்லை. மாறாக, சோகமும் ஏமாற்றமும் மாத்திரம்தான் மிஞ்சுகிறது. இக்கரை வந்து சேர்ந்தது பாக்கியமா? அபாக்கியமா? என்று முதல் முதலாகச் சந்தேகம் எழுந்தது அப்போதுதான். இதே நிலை தொடர்ந்தால் அது அபாயம்தான்.
இந்த வாழ்க்கை 'க்' கிழக்கத் துவங்கியதும் அப்போதுதான்.